நடிகர் கமலின் குணா படத்தை மறுவெளியீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
1991-ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த குணா திரைப்படம், இன்றளவும் இரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. குறிப்பாக அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த மஞ்சுமெல் பாய்ஸ் மலையாளத் திரைப்படத்தில், குணா படத்தின் வசனங்களும், பாடல்களும் ஓர் அங்கமாகவே அமைந்தன.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, குணா திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் மறுவெளியீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பிரமிட் ஆடியோ குரூப் நிறுவனம் குணா படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குணா படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குணா படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜூலை 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.