பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ரயில்வே திணைக்கள ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதி தபால் மூலம் அவர்களுக்கு பிரத்தியேக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பனாகொடையில் நேற்று (11) பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தொழிற்சங்கவாதிகளால் நாட்டின் பொதுச்சட்டம் சவாலுக்குட்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதியின் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு சவால் விடுத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
எனவே, அவர்கள் நாட்டின் சட்டத்தை மதிக்கவில்லை என்பதன் அடிப்படையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் அனைவரும் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதி ரயில்வே பொதுமுகாமையாளரினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
சுமார் 1000 பேருக்கு இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோரிக்கைகள் என்ற பெயரில் நாட்டு மக்களுக்கான சேவையை பலவந்தமாக பறிக்க முடியாதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேசமயம் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு பிறகு வழமை போல ரயில் சேவைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.