வவுனியா பல்கலைக்கழகத்தின் சகவாழ்வு மையத்தின் ஏற்பாட்டில் ‘அரசியலில் பெண்களை வலுவூட்டுதல்’ என்ற உயர்தர சான்றிதழ் கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வுநேற்று (11.06.2023) இடம்பெற்றது.
அதன்படி தொடர் தொலைக்கல்வி நிலையத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இக் கற்கை நெறியை வைபவ ரீதியாக சகவாழ்வு மையத்தின் பணிப்பாளரும் மற்றும் இவ் உயர்தர கற்கை நெறியின் இணைப்பாளருமான திருமதி ச.மதிவதனி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதல் முறையாக வவுனியா பல்கலைக் கழகத்தின் தொடர் தொலைக் கல்வி நிலையம் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட இக் கற்கை நெறியை பயில்வதற்காக பெண்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி செந்தில்குமரன் சுமித்ரா, சமூக செயற்பாட்டாளரும், வலுவூட்டுநருமான சரவணன்முத்து அறிவழகன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் இயக்குனர் சபையின் உறுப்பினர் ஜெயரஞ்சன் யோகராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
அத்துடன் வவுனியா பல்கலைக்கழக தொடர் தொலைக் கல்வி நிலைய பணிப்பாளர் ஜூட் லியோன், தொழில் வழிகாட்டல் ஆலோசகர் சசிதரன், கனரா பாலர் பாடசாலை இயக்குனர் அருட் சகோதரி குளோரியா ஜோசப் அவர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.