தமிழ் தேசிய தலைவருடன் தன்னை ஒப்பிட்டு சாவகச்சேரியின் முன்னாள் அத்தியட்சகர் அர்ச்சுனா பேசிய விடயம் என்பது கண்டிக்கத்தக்கதுடன், இறுதி யுத்ததின் போது ஆபத்தான பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாத்த டாக்டர் சத்தியமூர்த்தியை துரோகிபோன்று சமூக வளைத்தளங்கள் முன்னெடுக்கும் செயற்பாடு கவலைக்குரியது எனவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் நியமிக்கப்பட்ட மாவட்ட அமைப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சி தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களின் அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டதுடன் இணைப்பாளர்களுக்குமான கடிதங்களும் வழங்கப்பட்டன.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா சரவணன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா சரவணன் நடாத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், அம்மான் படைணி என்பது சமூக சீர்திருத்த அணியாகும். வடக்கில் பாரியளவிலான செயற்பாடுகளை அது முன்னெடுத்துவருகின்றது. வன்னியில் கடந்த மூன்று வருடமாக போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாகளை முன்னெடுத்துள்ளது.
காடழித்தல், மரக்கடத்தல்களை தடுப்பதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகின்றது. அதனை கிழக்கிற்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதற்காக கிழக்கு மாகாண அம்மான் படையணி பொறுப்பாளராக சீலன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது கட்சியின் அங்கமல்ல தனித்துவமான குழுவாக இயங்கிவருகின்றது.
அம்மான் படையணியை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் புலம்பெயர் அமைப்புகள் தீவிரம்காட்டிவருகின்றது. தேசியம் சார்ந்து செயற்படும் குழுவாக மாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
டாக்டர் அர்ச்சுனன் ஒரு மதிக்கத்தக்க வைத்தியர். அவரது பொறுப்புகளை செய்யவிடவில்லையென்பதற்காக சிலர் எதிர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அது நல்லவிடயம் தான்.ஆனால் அந்த விடயம் இன்று கேலிக்கூத்தாக சென்று கொண்டிருக்கின்றதோ என்று தோன்றுகின்றது. அதாவது அது அரசியலாக்கப்படுகின்றது.
ஓரு சில நாட்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றில் தான் பொதுவேட்பாளராக இறங்குவதற்கு தயாராகயிருக்கின்றேன், அனைத்து கட்சிகளும் எனக்கு ஆதரவு வழங்குமாயின் அதனை ஏற்றுக்கொள்வேன் என கூறியிருந்தார். இவர் ஒரு திட்டத்துடன் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனக்கு கீழ் உள்ளவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் அதற்குரிய முறைப்பாடுகளை மேற்கொண்டு படிப்படியாக நடவடிக்கைகள் எடுத்திருக்கவேண்டும். அதனை விடுத்து மக்கள் கிளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெருக்கடிகளை ஏற்படுத்தி அதனை மக்கள் பிரச்சினையாக மாற்றுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.
தலைமை இல்லாத நிலையில் மக்கள் எங்கு தமக்கு ஆதரவாக பேசுகின்றாறோ அங்கு மக்கள் கூடிடுவார்கள். அதனை அரசியலாக்குவதற்கு டாக்டர் அர்ச்சுனன் முயற்சிக்கின்றார். அரசியல் என்னும் விடயத்தினை இவர் எடுத்திருக்ககூடாது. சுதுமலை பிரகடனத்தின்போது நடைபெற்ற சம்பவத்திற்கு நிகராக தனக்கு நடந்த சம்பவத்தினை தலைவருடன் ஒப்பிட்டிருந்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம்.
டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள் இறுதி யுத்ததின்போது உயிர் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். குண்டுமழைக்கு மத்தியில் நின்று ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றிய ஒருவர். அப்போது அவரை கொண்டாடிய மக்கள் இன்று துரோகியாக சமூக வளைத்தளங்கள் ஊடாக காட்டமுற்படுகின்றனர்.இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்-என்றார்.