இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற திறமையுடைய 100,000 மாணவர்களுக்கும், க.பொ.த உயர்தர மாணவர்கள் 6,000 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்த வைபவம் கடந்த 2024.07.16 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் அபிவிருத்தி லொத்தர் சபையின் அனுசரணையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவ.சந்திரகாந்தன், ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவர்களான இராஜாங்க அமைச்சர்கள் எஸ்.வியாழேந்திரன், எம்.எல்.எம்.அதாவுல்லா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கல்வியதிகாரிகள் மற்றும் மாணவர்கள், மாணவர்களது பெற்றோர் என பெருந்திரலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போதுபொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற திறமையுடைய 1471 தரம் ஒன்று தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் 300 பேருக்கும் அதிதிகளினால் புலமைப்பரிசில்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.