தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டத்தைத் தொடர்ந்தும் நீண்ட காலத்திற்குப் பேண முடியாது எனவும், எனவே வங்குரோத்தான வர்த்தகங்களை கையாள புதிய சட்டமூலமொன்று கொண்டுவரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உத்தேச புதிய சட்டமூலத்தில் நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்குத் தேவையான உதவிகள் மற்றும் ஆதரவை வழங்க ‘என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் புதிய நிறுவனமொன்று உருவாக்கப்படும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையில் உள்ள நுண், சிறு, நடுத்தர அளவிலான தொழில் முனைவோரை ஊக்குவிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கை நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பினால் (Ceylon Federation of MSME) நேற்று (19) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘இலங்கையில் உள்ள நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஆற்றலுடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தீர்மானமிக்க முயற்சி’ என்ற வேலைத் திட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் பிரதியொன்றை இலங்கை நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் சம்மேளனத்திற்கு வழங்க முடியும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் தமது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நுண், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்பாடு செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.