யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சென்று விட்டு, வீடு திரும்பியவரை வாளினால் வெட்ட முயன்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 30ஆம் திகதி நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று விட்டு, வீடு திரும்ப முற்பட்டவரை, நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் வைத்து மூவர் அடங்கிய வன்முறை கும்பல் வாளினால் வெட்ட முயன்றுள்ளனர்.
வன்முறை கும்பலில் தாக்குதலில் இருந்து தப்பித்த இளைஞன், நீதிமன்றில் தஞ்சமடைந்துள்ளார். அது தொடர்பில் உடனடியாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, தாக்குதல் முயற்சி மேற்கொண்ட மூவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த மன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
மூவரையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்த நிலையில், மூவரும் தலைமறைவாகி இருந்தனர்.
இந்நிலையில், சுமார் 55 நாட்களின் பின்னர் மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் யாழில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், 04 திறந்த பிடியாணைகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.