தமிழர் தரப்பு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி இதுவரையில் எடுக்கவில்லையென கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர் தரப்பு பொது வேட்பாளர் விடயத்தில் நாங்கள் எடுத்த தீர்மானம் என்னவெனில்,ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களோடு பேரம் பேசி, அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை அவதானித்தே தீர்மானம் எடுப்போம்.
இதன்படி பிரதான வேட்பாளர்களாக தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டியிருக்கும் சஜித் பிரேமதாசவோடும் அநுரகுமார திஸாநாயக்கவோடும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம்.எங்களது எதிர்பார்ப்புக்க ளையும் நாம் இவர்களிடம் கூறியுள்ளோம்.
அவர்களுடைய தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னர் அவற்றை அவதானிப்போம். ஆனால், வேறு எவரும் இதுவரையில் தங்களை வேட்பாளரென அறிவிக்கவில்லை. அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அவர்களோடும் இதே போன்று பேச்சுவார்த்தையை நடத்துவோம். இவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.