வாகரைப் பிரதேசத்தில் மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் பிரதேச செயலாளரை தீடிரென இடம் மாற்றம் செய்து மாவட்ட செயலகத்திற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளார். வாகரைப் பிரதேச செயலாளர் மக்கள் மீது அக்கறையாக செயற்பட்டு வருகின்றார். மக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ளும் இலஞ்சம் ஊழல் அற்ற தலைசிறந்த நிருவாகியை ஏன் இடம் மாற்ற செய்ய வேண்டும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை(24.07.2024) அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் தமது அரசியல் தேவைகளுக்காக மாத்திரம் செயற்படுகிறார்கள். இந்நிலையில் இவ்வாறு மிகவும் நேர்மையாக செயற்படும் பிரதேச செயலாளரை இராஜாங்க அமைச்சர்கள் தேர்தல் காலங்களில் அவர்களது இலஞ்சம் ஊழல் சார்ந்த விடயங்களை மக்களுக்கு அம்பலப்படுத்தி விடுவார்கள் என அஞ்சி இவ்வாறான நேர்மையான அதிகாரிகளை திட்டமிட்டு தமது அரசியல் தேவைக்காக பழிவாங்குகிறார்கள்.
இதனை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் உணர்ந்து இந்த பிரதேச செயலாளருக்கு இடம்பெறும் அநீதி தொடர்பாக மாவட்ட செயலாளர் மற்றும் ஜனாதிபதி மட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடின் ஏனைய பிரதேச செயலாளர்களுக்கும் இவ்வாறான துர்பாக்கியகரமான சூழல் இந்த இரண்டு இராஜாங்க அமைச்சர்களினாலும் ஏற்படலாம்.
கிழக்கை மீட்போம், கிழக்கின் காவல் அரண், என கோசம் போட்டு திரியும் இராஜாங்க அமைச்சர்கள், புதிதாக தற்போது அம்பாறை மாவட்டதினை மையப்படுத்தி செயற்பட ஆரம்பித்துள்ளார்கள்.
மைலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டம், கல்முனை பிரதேச செயலகத்திற்கான முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம், இவ் ஆர்ப்பாட்டங்களுக்கு நீதி வழங்க முடியாமல் இருக்கிறது. எனவே அபிவிருத்தி என்ற போர்வையில், 10 வீத கொமிசனை எடுத்துக் கொண்டு கோடீஷ்வரர்களாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இராஜாங்க அமைச்சர்களாக இருந்தாலும் அவர்களால் எந்த பிரயோசனமும் இல்லை.
எனவே இந்த வாகரை பிரதேச செயலாளரின் திட்டமிட்ட தீடிர் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதி, கிழக்கு மாகாண ஆளுநர், பொது நிருவாக உள்நாட்டவர்கள், உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சு, மற்றும் அரசாங்க அதிபர், இதனை தடுத்து நிறுத்த வேண்டும்எனத் தெரிவித்த அவர் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்திருக்கின்ற இந்நிலையில் தமிழ் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக விடயத்திற்கு கைச்சாத்திட்டுள்ளனர்.
அதில் ஏன் தமிழ் அரசுக்கட்சி இணையவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் அவர் பதிலளிக்கையில்.
இவ்விடையம் தொடர்பில் தமிழ் அரசுக்கட்சி இன்னும் ஒரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்பது உண்மை. அதில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையும் போது அதுதான் தமிழ் மக்களின் பலமாக அமையும். அதில் இவ்வாறு இணைவதனால் தமிழ் மக்களின் ஒற்றுமை வெளிப்படும் என்பதே எனது நிலைப்பாடு. 46 வருடங்களாக பல ஜனாதிபதிகள் தமிழ் மக்களை வேண்டிய அளவுக்கு ஏமாற்றி இருக்கிறார்கள். இதற்கு எதிரொலியாக தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி இருக்கிறார்கள். சிங்கள தேசியவாதிகள் எம்மை ஏமாற்றிவிட்டார்கள் இதனை கடந்து, தமிழ் தேசியம் சார்ந்தவர்கள் ஐக்கியப்படும் போது அதுவே எமது பலமாகும்.
இதனால் சர்வதேசத்திற்கு நாம் ஒற்றுமையாக உள்ளோம், நமது தமிழர்களின் பலத்தை உலகிற்கு காட்ட வேண்டும், எனவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கரிசனை செலுத்துவது கட்டாயமாகும்.
தமிழ் பொது வேட்பாளரை படுதோல்விடைய செய்ய வேண்டும் என்பவர்கள், நிச்சயமாக தமிழ் தேசிய வாதிகளாக இருக்க முடியாது. அவர்கள் சிங்கள தேசியவாதிகளே இந்த கருத்தை சிங்கள தேசியவாதிகள் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். அதை விடுத்து இவ்வாறு தமிழ் தேசிய வாதிகள் கருத்து தெரிவிப்பது பிழையானது.
அவ்வாறு தனிப்பட்ட கருத்து தெரிவித்தாலும், அது கட்சிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.