யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் , மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்தியவர்கள் என 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமைகளில் பண்ணை பகுதியில் பெருமளவாவர்கள் நடை பயிற்சி செய்வதற்கும் , குழந்தைகள் , சிறுவர்களுடன் கடற்கரையில் பொழுதை கழிக்கவும் என கூடுவார்கள்.
இந்த நேரங்களில் இளைஞர்கள் குழுக்கள் பெரிய சத்தங்களுடன் மோட்டார் சைக்கிள் ஓடுதல் , வீதியில் ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துதல் என மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்து மக்களுக்கு இடையூறு விளைவித்து வந்தனர்.
அது தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , போக்குவரத்து பொலிஸார் நேற்று முன்தினம் (27) பண்ணை பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன் போது மோட்டார் சைக்கிளை ஆபத்து விளைவிக்கும் வகையாக செலுத்தியமை , போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் 10 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் , அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் , நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.