இந்திய மீனவரொருவர் உயிரிழந்து, பிறிதொருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் டில்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகரிடம் தமது வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, மீனவர் விவகாரத்தை மனிதாபிமான அணுகுமுறையுடன் கையாளவேண்டும் எனும் இருநாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வை இறுக்கமாகப் பின்பற்றவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் 01 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை இந்திய மீன்பிடி படகும், இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலும் மோதிய சம்பவத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன், மேலும் ஒருவர் காணாமல்போயுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் டெல்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகரிடம் தமது எதிர்ப்பைக் காட்டமாக வெளிப்படுத்திய இந்திய வெளிவிவகார அமைச்சு, இதுகுறித்து ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது.
கச்சதீவுக்கு வடக்கே 5 மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பலும், இந்திய மீன்பிடி படகும் மோதிய சம்பவமொன்று வியாழக்கிழமை (1) அதிகாலை பதிவாகியுள்ளது. அப்படகில் இருந்த நால்வரில் துரதிஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்திருப்பதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.
இரு மீனவர்கள் காப்பாற்றப்பட்டு காங்கேசன்துறைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். காணாமல்போன மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கொன்சியூலர் அலுவலக அதிகாரியை காங்கேசன்துறைக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் இலங்கையில் இந்திய கடற்றொழிலாளர் மரணித்த சம்பவத்தை அடுத்து இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், இறந்த கடற்றொழிலாளர் மலைசாமியின் குடும்பத்தினருடன் இணைந்து, இராமேஸ்வரம் அரச மருத்துவமனை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்பரப்பில் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்த செய்தி, பரவியதையடுத்து, இராமேஸ்வரம் மற்றும் கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தின் பிற பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை, அமைதியற்ற சூழ்நிலை நிலவியது
இதற்கிடையில் குறித்த சம்பவத்தின்போது காணாமல்போனதாக கூறப்பட்டுள்ள ராமச்சந்திரன் என்ற கடற்றொழிலாளர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.