2040 ஆம் ஆண்டளவில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழும் எனத் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர நகரங்களுக்கான கடல் மட்ட உயர்வு மற்றும் கடல்நீர் புகுவது பற்றிய வரைபட அறிக்கையை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையிலிருந்து 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் சென்னை மற்றும் மும்பை நகரங்களே முதன்மை நகரங்களாக பரிசீலிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 2040 ஆம் ஆண்டில் சென்னை பெருநகரப் பகுதியின் குறிப்பிட்ட பகுதிகள் 7.29 சதவிகிதம் வரையில் நீரில் மூழ்கும் எனவும், 2060 ஆம் ஆண்டில் 9.65 சதவிகிதம் ஆகவும், 2080 ஆம் ஆண்டில் 15.11 சதவிகிதம் என நீர்மூழ்கும் இந்தப் பரப்பு அதிகரிக்க கூடும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத் திடல், அசோகச் சக்கர நினைவுச் சின்னம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் துறைமுகம் முதலான பகுதிகளில் கடல் மட்டம் உயரும் அபாயமுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1987 முதல் 2021 வரையான காலப்பகுதியில் சென்னையின்; கடல் மட்டம் 0.679 சென்றி மீற்றர் வரை உயர்ந்துள்ளதாகவும், வருடாந்திர உயர்வு 0.066 சென்றி மீற்றர் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரியவந்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் மும்பையில் அதிகபட்ச கடல் மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடியிலுள்ள தொழிற்பேட்டைப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் நகரமயமாக்கல், கடற்கரையில் ஏற்படும் காலநிலை மாற்றங்களின் காரணமாக தாழ்வான கடலோர பகுதிகள் கடல் மட்ட உயர்வால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது