பிரித்தானியாவில், எதற்கோ எப்படியோ துவங்கிய போராட்டம் ஒன்று, தற்போது புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ளதால், வெளிநாட்டவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இங்கிலாந்திலுள்ள Southport என்னுமிடத்தில், Axel Muganwa Rudakubana (17) என்னும் இளைஞன், குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கினான்.
அந்த தாக்குதலில், பல பிள்ளைகள் காயமடைந்தார்கள், மூன்று குழந்தைகள் உயிரிழந்தார்கள். அதைத் தொடர்ந்து, தாக்குதல்தாரி ஒரு புகலிடக்கோரிக்கையாளர் என்றும், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் வேகமாகப் பரவத் துவங்கின.
அதைத் தொடர்ந்து, புகலிடக்கோரிக்கையாளர்கள் மையங்கள் மீது தாக்குதல்கள் துவங்கியுள்ளன. ஆசியர்களைக் குறிவைத்து தாக்கும் சம்பவங்களும் துவங்கியுள்ளன.
Middlesbrough பகுதியில், வாகனங்களில் செல்வோரை வழிமறிக்கும் கூட்டம் ஒன்று, அவர்கள் வெள்ளையர்கள் என்றால் மட்டுமே அவர்களை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும் ஒரு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
முதலில், Rotherham என்னுமிடத்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஒரு ஹொட்டல் மீது புலம்பெயர்தல் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
பின்னர், Tamworth என்னுமிடத்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹொட்டல் ஒன்றுக்கு தீவைத்துள்ளார்கள் போராட்டக்காரர்கள்.
இதனால், புலம்பெயர்ந்தோரும், வெளிநாட்டவர்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
Yorkshireஐச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான Azeem Rafiq, தங்கள் குடும்பம் அச்சத்தில் உறைந்திருப்பதாகவும், வெளியில் நிலவும் வன்முறை காரணமாக, இரவில் தூங்கக்கூட பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில், எதையோ வலுக்கட்டாயமாக காரணம் காட்டி, பிரித்தானியாவின் அமைதியைக் குலைத்துவிட்டதாக சிலர் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.