கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு பெற்ற சிகண்டி முனிவரினால் பூசிக்கப்பட்ட சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்ற உற்சவமானது அந்தணர்களின் வேத மந்திரம் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்களின் அகோரா கோசத்துடன் கொடியேற்றமானது பக்தி பூர்வமாக இடம் பெற்று.
இன்றைய(05) கொடி ஏற்ற உற்சவத்திற்காக சித்தாண்டி சின்னவெளி விவசாய கண்டத்தில் விளக்கு மண் எடுக்கப்பட்டதும், ஆலய வன்னிமை தலைமையில் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை சம்பிராயபூர்வமாக கொண்டுவரப்பட்டதும், கொடியேற்றத்துக்குரிய யாக பூஜைகள், வசந்த மண்டபூசைகள் என்பன இடம் பெற்று முருகப்பெருமான் வள்ளி, குஞ்சரி சமேதராக கொடித்தம்பத்துக்கு முன்னால் வருகை தந்ததும் வேத பாராயணத்துடன் உரிய சுப வேளையில் கொடியேற்றம் இடம்பெற்றது.
கோவிலின் மகோற்சவ பெருவிழாவானது குடியிரிமை திருவிழாவாக இன்றிலிருந்து 16 நாட்கள் நடைபெறும்.
உற்சவ காலங்களில் எதிர்வரும் 16, 17, 18 ஆகிய நாட்கள் இலங்கையில் எங்கும் இல்லாதவாறு மயில் கட்டு எனும் விசேட யாக பூசை நடைபெற்று, முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் செய்யும் மரபு ரீதியான விசேட பூசைகள் நடைபெறும்.
மயில் கட்டும் அன்றைய தினம் தீமிதிப்பும் நடைபெறும்.
எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை சித்தாண்டி 4 உதயமூலையில் அமையப்பெற்ற பிரணவ தீர்த்தத்துடன் மகோற்சவ பெருவிழா நிறைவுபெறவுள்ளது.