அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் இருந்து விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ள எட்டு இராஜாங்க அமைச்சர்களே இந்த முடிவை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது, டி. வி சானக , தேனுக விதானகமகே , சசீந்திர ராஜபக்ச , அசோக பிரியந்த , மொஹான் டி சில்வா , இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் சிறிபால கம்லத் ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் குழுவே இவ்வாறு பதவி விலக உள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமல் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளில் நீடிப்பது நெறிமுறையல்ல என பல அமைச்சர்கள் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எவ்வாறாயினும், அந்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட காரணத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி , சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளதாக இந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அரசியலில் தனிப்பட்ட முடிவுகளை இணைக்க வேண்டாம் என பவித்ரா வன்னியாராச்சியிடம் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.