புத்தளம் – எரம்புகொட களப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேல் மாகாண கடற்படை கட்டளையின் படி விஜய கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை சோதனைக்குட்படுத்திய போது அதில் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த லொறியில் 21 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 689 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் 43 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், பீடி இலைகள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி இயந்திர படகு ஒன்றும், பீடி இலைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 689 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 21 உரமூடைகளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் டிங்கி இயந்திர படகு, லொறி என்பனவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.