இரத்தினபுரி, எந்தானை பொலிஸ் பகுதியிலுள்ள மடலகம தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் காரியாலயத்துக்கு இனந்தெரியாத சிலரால் நேற்று சனிக்கிழமை(10) மாலை 07 மணியளவில் தீ வைக்கப்பட்டதால் அங்கிருந்த மிக முக்கியமான தஸ்தாவேஜிகள் மற்றும் மாணவர்களின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான ஆவணங்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை மாலை வேளையில் பாடசாலை கட்டடத்தில் இருந்து திடீரென பாரிய புகை மண்டலம் வெளிவரவே பிரதேச மக்கள் சம்பவ இடத்துக்கு ஓடிச் சென்று தீயை அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
பிரதேசவாசிகளின் அதீத முயற்சி காரணமாகவே இத் தீப் பரவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இல்லையேல், பாடசாலை கட்டடமே முற்றாக சேதமடைந்திருக்கும் என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மூடப்பட்டிருந்த இப்பாடசாலையின் மற்ற கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற இனந்தெரியாத நாசகாரர்கள் சிலர் அலுமாரியிலுள்ள அனைத்து ஆவணங்களையும் வெளியே எடுத்து கீழே போட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த எந்தானை பொலிஸார் உடனடியாக ஸ்தலத்துக்குச் சென்று ஆராய்ந்த பின்னர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளபோதிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இப்பாடசாலைக்கருகில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்பவர்களின் சதி வேலையாக இருக்குமென பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.