பங்களாதேஷில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்ததன் பின்னர் அங்கு கடந்த சில நாட்களில் மாத்திரம் சிறுபான்மையினர் (இந்து சமூகம்) மீது 205 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டின் சிறுபான்மை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
பங்களாதேஷில் வெடித்த வன்முறையால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 05 ஆம் திகதி பதவி விலகி இந்தியாவிற்கு தப்பிச்சென்றார்.
தொடர்ந்தும் அந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்தன. இந்தநிலையில், பங்களாதேஷில் உள்ள சிறுபான்மை அமைப்புகளான இந்து, புத்த, கிறிஸ்தவ ஒற்றுமை கூட்டமைப்பு மற்றும் பூஜா உத்ஜபன் பரிஷத் ஆகிய அமைப்புகள் முகம்மது யூனுஸிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் “கடந்த 05 ஆம் திகதி முதல் சிறுபான்மையினருக்கு எதிராக பங்களாதேஷில் 205 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆயிரக்கணக்கான இந்துக் குடும்பங்கள் நிர்க்கதியாகிவிட்டன. பல கோயில்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக என்றும் இல்லாத வகையில் வன்முறைகளை மேற்கொண்டு ஒரு கட்சி சதி செய்வதை நாங்கள் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த அமைதியின்மை சர்வதேச கண்டனத்தையும் விளைவித்துள்ளது. இந்தப் போக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.