சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல் 9ம் வீதியில் அமைந்துள்ள வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) பெண் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது அதிகாலை 3 மணியளவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணைத் தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றதாக நேற்று (11) நகை உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கல்முனை பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் இன்று திங்கட்கிழமை திருடப்பட்ட நகையை மீட்டதுடன், திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை சம்மாந்துறை பிரதேசத்தில் வைத்து சம்மாந்துறை பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சம்மாந்துறை கைகாட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர், தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கும்படி பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.