ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், கிழக்கு மாகாணத்தில் முதலாவது தேர்தல் அலுவலகம் நேற்று (12) மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள திருகோணமலை பிரதான வீதியில் இந்த அலுவலகம் திறந்தது வைக்கப்பட்டதுடன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை ஒன்றிணைந்து இதனை திறந்துவைத்தன.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், இந்த அலுவலகத்தின் இணைப்பாளருமான எஸ்.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுதர்சன், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட மகளிர் இணைப்பாளர் சசிகலா ஜெயதேவா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அதேசமயம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய ஆதரவு வழங்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து கொண்டு செல்லும் அலுவலகமாகவும் இது செயற்படவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.