இந்தியா, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவை மாவட்டத்தில் உக்கடம், காந்திபுரம், பீளமேடு, வடகோவை, சித்தாபுதூர், புலியகுளம், பாப்பநாயக்கன் பாளையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணை தனது முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. இதனால், பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் மூன்றாவது நாளாக மழை பெய்தது. பெரியகுளம், முருகமலை, தாமரைக்குளம், வடுகபட்டி மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை அணை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வழிந்தோடியது.
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலை கிராமப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. நெல்லையில் இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 3-ஆவது நாளாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி, திட்டங்குளம், மூப்பன்பட்டி, நாலாட்டின்புதூர், இலுப்பையூரணி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், நெல்லை, கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும் என 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.