பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் நேற்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, நாட்டில் நிலவும் பொருளாதார அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
அதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது செயல்படுத்தியுள்ள வேலைத்திட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது.
எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஏ.எல்.எம். அதாவுல்லா எம்.பி உறுதியளித்துள்ளார்.
இதன்போது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான தேசிய காங்கிரஸின் பரிந்துரைகள் மற்றும் யோசனைகள் அடங்கிய பிரேரணை ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்பணிப்புடன் செயற்படுவதாக தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியும் அறிவித்துள்ளது.
தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன்தினம் (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து இதனை அறிவித்தனர்.
இந்த நாட்டில் சீர்குலைந்துள்ள பொருளாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தைப் பாராட்டுவதாகவும், இனிவரும் காலங்களிலும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஜனாதிபதியின் தலைமை அவசியமானது என்றும் சுகத் ஹேவாபத்திரன தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு தமது கட்சியும் உறுப்பினர்களும் அர்ப்பணிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.