நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனோ கணேசன் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இன்று (15) காலை அறிவித்தார்.
இந்தப் பின்னணியில் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் வேலுகுமார் நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 2010 நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட நபருடனேயே வேலுகுமார் தற்போது கைக்கோர்த்துள்ளதாகவும், இதன் மூலம் இவரை நாடாளுமன்றத்துக்கு கொண்டுச் சென்ற கட்சி, தலைமை, வாக்களித்த மக்கள் முகங்களிலும் கரிப் பூசி உள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சாடியுள்ளார்.