கனடாவின் பிரம்ப்டன் நகரில் அமைக்கப்படவுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியின் நிர்மாணப் பணிகளுக்கு அந்நாட்டின் புலம்பெயர் சிங்கள மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வின் அடிக்கல் நாட்டு விழாவின் போது இலங்கையின் தேசியக்கொடியை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னம் கட்டப்படுவதை இலங்கை அரசாங்கம் தடுக்க முயன்றதைத் தொடர்ந்து, அதை சீர்குலைக்கும் முயற்சிகள் புலம்பெயர் நாடுகளிலும் மேலோங்குவதாக இதன்போது விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் தூபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கனடாவின் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன், “கனடாவில் வெளிநாட்டு தலையீட்டை நாங்கள் வரவேற்கவில்லை. இனப்படுகொலையை மறுப்பவர்கள் மீண்டும் கொழும்புக்கு செல்லுங்கள்.
இந்த இனப்படுகொலை மறுப்பாளர்கள் நமது ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.
தங்கள் மாவீரர்களை துக்கப்படுத்துபவர்களை, தங்கள் அன்புக்குரியவர்களை துக்கப்படுத்துபவர்களை கொடுமைப்படுத்த அவர்களுக்கு இலங்கையில் உரிமை இருக்கலாம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டதற்குப் பிரதிபலனாக, 2021 ஆம் ஆண்டில் நினைவுச்சின்னம் ஒன்றை நிர்மாணிப்பது முதன்முதலில் முன்மொழியப்பட்டது.
அந்த நேரத்தில், கனடாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் பல எம்.பி.க்கள் இந்த அழிவைக் கண்டித்தனர்.
இலங்கை ஆட்சி தங்கள் சொந்த இரத்தக் கறை படிந்த வரலாற்றை வெள்ளையடிக்க முயற்சிக்கும் அதே வேளையில், கனடாவில் நாங்கள் அதற்கு நேர்மாறானதைச் செய்வோம்” என்றார்.