வட இந்திய மாநிலங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் வெயில் கொடுமை தாங்க முடியாமல் கடந்த சில நாட்களில் மட்டும் 98 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோடை காலங்களில் பொதுவாக வெயில் உக்கிரமாக இருக்கும். நாட்டின் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும். வெயிலின் கோரத்தாண்டவத்தில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க மாநில அரசுகள் பல்வேறு அறிவுறுத்தல்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன.
வட இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகாரில் கடந்த சில நாட்களாக வெயில் வழக்கத்தை விட கடுமையாக உள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் பீகார், உ.பி. மாநிலங்களில் 98 பேர் வெயில் கொடுமையை தாங்க முடியாமல் மரணம் அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 54 பேரும் பீகாரில் 44 பேரும் வெயிலால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வெயில் தாக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெயிலால் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவிக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில்தான் வெயில் காரணமான உயிரிழப்புகள் அதிகம். அதேபோல பீகாரில் பாட்னாவில்தான் அதிக அளவிலான வெயில் மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் பாதிப்பு, வெயில் அதிகரிப்பு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகளை வானிலை மையம் வெளியிட்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் கோடை கால விடுமுறைகள், வெயில் காரணமாக நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசும் அறிவித்துள்ளது.