ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நிலுவை சம்பளம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி அலுவலகம் கோரியிருந்த போதிலும் இதுவரை கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை, அறிக்கை தயாரிப்பது தொடர்பில் கடந்த 31 ஆம் திகதி தொழிற்சங்கங்களை அழைத்து கலந்துரையாடல் ஒன்றை அமைச்சு நடத்திய நிலையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அலுவலகம் கல்வி அமைச்சிடம் முன்வைத்து அறிக்கை கோரியுள்ளது.
இந்தநிலையில், சம்பளம் வழங்கப்படாதமையினால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பின் பின்னர் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அத்தோடு, தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி சம்பள நிலுவை அறிக்கையை அனுப்புமாறு ஜனாதிபதியின் செயலாளர் அந்த கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார்.
எனினும் இதுவரையில் அறிக்கையை அனுப்புவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.