கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து இந்தியா முழுவதும் இன்று ( ஆகஸ்ட் 17 ) வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 17 அன்று 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சம்பவம் தொடரப்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவிலுள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், இவர் காவல்துறையுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கோரி சக வைத்தியர்கள் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய போது, மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியாமுழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். அவசர வழக்குகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். எனினும் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நவீன மருத்துவர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து துறைகளிலும் இந்த பணி புறக்கணிப்பு நடைபெறும். மருத்துவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவர்கள் சங்கம் கோருகிறது என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
கொல்கத்தாவிலுள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்றுவந்த பெண் மருத்துவர் (வயது 28) ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். மருத்துவமனையில் அமைந்திருக்கும் கருத்தரங்கக் கூடத்தில் அதிகாலை 3 மணியளவில் அவர் உறங்கச் சென்றார். மறுநாள் காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவரின் பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதடு ஆகிய இடங்களில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்திருக்கிறது. இந்தக் கொடூரத்தைக் கண்டு ஆவேசமடைந்த சக மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும், செவிலியர்களும் போராட்டத்தில் இறங்கினர். ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கிய போராட்டம், மேற்குவங்கம் முழுவதும் பரவியது. அதனால், மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன.
கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு இழைக்கப்பட்ட அந்தக் கொடுமைக்கு எதிராக டெல்லி உள்பட பல இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். டெல்லியில் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஆர்.எம்.எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, வி.எம்.எம்.சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனை, டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.