அரசியல் ‘அநாதை’யானார் மைத்திரி
🛑 ‘தலைவர்’கள் ஒருபுறம் ‘பிரதித் தலைவர்கள்’ மறுபுறம்
🛑 தேர்தலால் பிளவுபட்டு நிற்கும் அண்ணன், தம்பிமார்
ஜனாதிபதி தேர்தல் ஒருபுறம் சூடுபிடித்துள்ளது, மறுபுறத்தில் கட்சி தாவுதல், காலைவாருதல், குதிரை பேரம் என சாக்கடை அரசியலுக்கே உரித்தான சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன.
ஜனாதிபதி தேர்தலால் சிறு கட்சிகள் பிளவுபட்டு நிற்கின்றன. தலைவர் ஒருபுறத்திலும் பிரதித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுபுறத்திலும் நிற்கின்றனர். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் , ஐக்கிய மக்கள் கூட்டணி பக்கம் ‘ஏணி’யை வைத்துள்ளார். அக்கட்சியின் பிரதித் தலைவர் வேலுகுமார் ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவு பயணத்துடன் இணைந்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூம் ஹக்கீம் சஜித்துடன் கூட்டு பயணத்தை தொடர்ந்தாலும் அக்கட்சியின் பிரதித் தலைவர் அலி சாஹிர் மௌலானா, ரணில் அணிக்கு தாவியுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்துக்காக தோகை விரித்தாடிவரும் நிலையில், அக்கட்சியின் உப தலைவர் இஷாக் ரஹ்மான் ரணிலுக்கு பக்க வாத்தியம் வாசித்துவருகின்றார்.
ரணதுங்க குடும்பத்தில் அண்ணன் அர்ஜுன ரணதுங்க சஜித்துக்காக களமாடிவருகின்றார், தம்பி பிரசன்ன ரணதுங்க ரணிலுக்காக அரசியல் ஆட்டம் ஆடிவருகின்றார். காமினி திஸாநாயக்க குடும்பத்தில் அண்ணன் நவீன் திஸாநாயக்க ரணிலுடனும், தம்பி மயந்த திஸாநாயக்க சஜித்துடனும் பயணிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன் மனோ கணேசனும், தம்பி பிரபாகணேசனும் ஒரு கூட்டணியின்கீழ் வந்துள்ளனர். வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் இருவரும் சஜித்தை ஆதரிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அரசியல் ரீதியில் அநாதையாக்கப்பட்டுள்ளார். அவருடன் கூட்டணி வைப்பதற்கோ அல்லது அவரின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கோ பிரதான அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டிவருகின்றன. நீதி அமைச்சராக செயற்பட்ட விஜயதாச ராஜபக்சவுக்கு தலைமைப்பதவியை வழங்குவதற்காக சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியை மைத்திரி துறந்தார். நீதிமன்றமும் அவருக்கு தடை விதித்திருந்தது.
பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்சவை அவர் பெயரிட்டார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுகின்றார். எனினும், அவருக்கு ஆதரவளிக்கும் முடிவில் இருந்து மைத்திரிபால சிறிசேன தற்போது பின்வாங்கியுள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு அவர் முன்வந்தபோதிலும் அதற்கு பச்சைக்கொடி காட்டப்படவில்லை என தெரியவருகின்றது. மைத்திரியின் ஆதரவை பெற்றால் அது கத்தோலிக்க வாக்குகளை முற்றாமல் இல்லாமல் ஆக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் தனது மகனை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன முயற்சித்துவருகின்றார். இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலில் தான் எவருக்கும் ஆதரவளிக்கும் முடிவை எடுக்கவில்லை என மைத்திரிபால சிறிசேன இன்று அறிக்கைமூலம் அறிவித்துள்ளார்.