இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 350 கோடி ரூபாவை செலவிட அனுமதி கோரியுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரு வாக்காளருக்காக செலவிடக்கூடிய தொகை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
அதேவேளை இந்த வேட்பாளர்கள் எவருக்கும் வேலையோ, வருமான ஆதாரமோ இல்லை என தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் 350 கோடி ரூபாவை எவ்வாறு செலவிட முடியும் என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.