“தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி விலகியமை அரசியல் இலஞ்சம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனம் தொடர்பிலும், ஆளுநராக வருவதற்கு அவர் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகள் பற்றியும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
” உள்ளூராட்சி சபை தேர்தல் அண்மித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அதிபர் ரணிலை கைப்பொம்பையாக பாவித்து தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகி, வட மாகாண ஆளுநர் பதவியை அரசியல் இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார்.”
இப்படியாக குற்றச்சாட்டை ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் முன்வைத்துள்ளார்.
மேலும் அவர்,
“தேர்தலை பிற்போடுகின்ற அல்லது பின்னடிக்கின்ற ஒரு நடவடிக்கையின் உத்தியாக ரணில் மேற்கொண்ட செயல்பாடுகளின் விளைவே இந்த ஆளுநர் மாற்றங்கள்.
அதன் விளைவாகவே தற்போதைய வடக்கு ஆளுநர் பதவிக்கு வந்துள்ளார். ரணில் விக்ரமசிங்க அரசியல் ரீதியிலான இப்படியான நகர்வுகளை மேற்கொள்வது மக்களுக்கு புதிதல்ல, ஆனால் இதன் மூலம் யார் யாரெல்லாம் எவ்வாறான சலுகைகளை பெறுகின்றார்கள் என்பது முக்கியம்.
மக்களின் ஜனநாயக உரிமைகள் இப்படி எல்லாம் மறுக்கப்படுகிறது, இருந்தாலும் மக்கள் இதற்கான பதிலை விரைவில் கூறுவார்கள்.
எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தேர்தல் வரும்பொழுது இதற்கான பதில் நிச்சயம் கிடைக்கும்.
தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகியமைக்காக கொடுக்கப்பட்ட இலஞ்சத்தை பதவியாக பெற்றுக்கொண்டவரே தற்போதைய வடக்கு ஆளுநர்.
அவர் நிச்சயம் பெற்றிருக்கக் கூடாது, வடக்கு மாகாண ஆளுநர் பதவியை பெறுவதற்காகவே தேர்தல் ஆணைக்குழுவில் இருந்த பதவியை இழந்தது உண்மை.
ஒரு பதவியை பெறுவதற்காக இன்னுமொரு பதவியை இழந்து இருப்பது மக்கள் நலன் சார்ந்த விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஏனெனில், ஆளுநர் பதவியை விட ஜனநாயக முறைமையோடு சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் பதவியென்பது முக்கியமான ஒன்று.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் எனும் முக்கியமான பதவியை துறந்து, இந்த ஆளுநர் பதவியை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட அம்மையாரை நான் கவலையோடு பார்க்கிறேன்.” இவ்வாறு தனது குற்றச்சாட்டை உமாசந்திரா பிரகாஷ் முன்வைத்துள்ளார்.