வாகரை – கதிரவெளி பகுதியில் தமது காணியை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்பரவு செய்ய சென்றவர்கள், பொதுமக்களின் காணியை அபகரிக்க முற்பட்டதாக அந்த பகுதி மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்டபோது அங்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்படுவது.
இந்த நிலையில் காணியின் உரிமையாளரான பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர், தனது கைத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் சம்பவ தினமான நேற்று (17) பெரும் பதற்றமான சூழல் அங்கு காணப்பட்டிருந்ததது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த கடல் பிரதேசத்தை அண்டிய 11 ஏக்கர் காணியை, லண்டணில் வசித்துவரும் தமிழர் ஒருவர், கடந்த காலத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த காணியை துப்பரவு செய்து கம்பி வேலி அடைக்கும் நடவடிக்கைக்காக சம்பவதினமான நேற்று ஜே.சி.பி இயந்திரத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சென்று, துப்பரவு பணியை ஆரம்பித்த நிலையில் அங்கு ஒன்று கூடிய மக்கள் தமது காணியை அபகரிப்பதாகவும், உங்கள் காணியின் எல்லையை தாண்டி நிலத்தை அபகரிப்பதாகவும், உங்களுடைய காணியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு கடல் அரிப்பினால் கடலுக்குள் சென்று விட்டது என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது கடல் இருக்கும் இடத்தில் இருந்து உங்கள் காணி பின் நோக்கி இருப்பதாக நினைத்து காணி எல்லையைதாண்டி உமது காணிகளை அபகரிப்பதாக தெரிவித்தனர்.
இதன் போது இரு சாராருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஜே.சி.பி இயந்திரத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்ததையடுத்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இந்த அசாதாரண சூழ்நிலையின் போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் கூட்டுத்தாபனத்தின் தலைவரையும், ஜே.வசி.பி இயந்திரத்தையும் பாதுபாப்பாக அங்கிருந்து வெளியேற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.