இலங்கை கால்பந்தாட்ட அணி முதல் தடவையாக தெற்காசியக் கால்பந்தாட்ட பேரவையின் (SAFF) போட்டித் தொடரில் பங்கு பெறும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இந்தப் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்ட பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தொடர்ந்து இலங்கை அணி முதல் தடவையாக இந்தப் போட்டித் தொடரில் பங்குபற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.
தெற்காசியாவில் நடைபெறும் மிகப் பெரிய கால்பந்தாட்ட போட்டித் தொடர் இதுவாகும்.
1993ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் இலங்கை இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தது.
மேலும், 1995ஆம் ஆண்டு இலங்கை இந்தப் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.