சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 36 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை தற்போது சமோவா நாட்டின் வீரர் டேரியஸ் விசர் ஒரே ஓவரில் 39 ஓட்டங்களை எடுத்து முறியடித்து மாபெரும் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
மேலும் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் ஒரே ஓவரில் 36 ஓட்டங்களை அடித்ததே சாதனையாக இருந்தது. முதன் முதலாக 2007 டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் அந்த சாதனையை செய்தார்.
அதன் பின்பு, கீரான் பொல்லார்டு (2021), நிக்கோலஸ் பூரன் (2024), திபேந்திரா சிங் ஏரி (2024) ரோகித் சர்மா / ரிங்கு சிங் இணைந்து (2024) என ஐந்து முறை அந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
2026 டி20 உலக கோப்பை தகுதி சுற்றில் வனுவாட்டு- சமோவா தீவுகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சமோவா அணி 20 ஓவர்களில் 174 ஓட்டங்களை குவித்தது. இதில் டேரியஸ் விசர் அதிரடியாக ஆடி 62 பந்துகளில் 132 ஓட்டங்களை சேர்த்தார். அதில் 5 நான்கு ஓட்டங்கள் மற்றும் 14 ஆறு ஓட்டங்கள் அடங்கும்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய வனுவாட்டு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. அதன்படி, சமோவா அணி 10 ஓட்டங்களால் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வனுவாட்டு வீரர் நாலின் நிபிகோ வீசிய 15-வது ஓவரில் டேரியஸ் விசர் ஆறு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மூன்று நோ பால்களும் வீசப்பட்டன. அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 39 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.