சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பிரிட்டனின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அடுத்த வேந்தராக பதவியேற்க விண்ணப்பித்துள்ளதாக அவரது கட்சி தெரிவித்துள்ளது.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) இன் லண்டனைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் சையத் சுல்பிகர் புகாரி மூலம் விண்ணப்பத்தை “முறையாக சமர்ப்பித்துள்ளார்” என்று கட்சி, சமூக ஊடக தளமான எக்ஸ் இல் தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் 1975-ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்டில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதார துறையில் பட்டம் பெற்றார்.
“ஒரு வருடத்திற்கும் மேலாக சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், கான் தனது கொள்கைகள் மற்றும் வெற்றிபெறும் மனநிலையில் உறுதியாக இருக்கிறார்” என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது ஒரு சம்பிரதாயமான பதவி, ஆனால் மிகுந்த மரியாதை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் இம்ரான் கான், ஒக்ஸ்போர்டில் பிரபலமான பெயர்களில் ஒருவராக இருப்பதால், அவரை அதிபராகப் பார்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
“அவர் அதிபரானால், ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராக இருப்பார். இது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல, ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு இது ஒரு பெரிய சாதனையாக இருக்கும்,” என்று புகாரி மேலும் கூறினார்.
இதேவேளை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ உட்பட ஆறு பிரதமர்களும், இரண்டு அதிபர்களும் ஒக்ஸ்போர்டில் படித்துள்ளனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தற்போதைய வேந்தர் கிறிஸ் பாட்டன், பெப்ரவரியில் தனது பதவியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.