தமிழ் கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கதடிமொன்றை எழுதவுள்ளன. இது தொடர்பில் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் புதுடில்லி செல்லவுள்ள நிலையில்தான் மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவை அணுகுவது தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில் தவிர்க்க முடியாத விடயம்தான். ஆனால், விடயங்கள் சரியாக அணுகப்படுகின்றனவா -என்பது முக்கியமானது.
ஏற்கனவே. ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தன. ஆனால். அந்தக் கடிதம் எழுதுகின்றபோது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. கடிதம் எழுதிய பின்னரும் சிக்கல்கள் இடம்பெற்றிருந்தன. ஆரம்பத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாகவே விடயம் தீர்மானிக்கப்பட்டது – பின்னர். சமஷ்டியை உள்வாங்க வேண்டுமென்று வாதங்கள் தலை தூக்கின. தமிழரசு கட்சிக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் தேவையற்ற விவாதங்கள் இடம்பெற்றன. கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாக இந்திய பிரதமரிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட முயற்சியானது – இறுதியில் சமஷ்டி மற்றும் இனப்பிரச்னை வரலாறு சொல்லும் கதையாக மாறியது.
கடிதம் எழுதிய பின்னரும் அதனை முறையாக அணுகவில்லை. ஒரு பிராந்திய சக்தியின் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதம் பிரதமரின் பார்வைக்கு செல்வதற்கு முன்னர் அனைத்து ஊடகவியலாளர்களின் கைகளிலும் இருந்தது. கடிதம் முழுமையாக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டது. பின்னர் எதற்கு பிரத்தியேகமாகக் கடிதத்தை அனுப்ப வேண்டும்?
தமிழ் மக்களின் அறிவை மற்றவர்கள் பரிகசிக்கும் வகையிலேயே கடிதம் அனுப்பும் படலம் முடிவுற்றது. இப்போது அடுத்த கடிதம் எழுதும் படலம் ஆரம்பமாகப் போவதாகக் கட்சிகள் கூறுகின்றன. இதனையாவது, சரியாகவும் நேர்த்தியாகவும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டோடு நிற்கும் வகையிலும் எழுதுங்கள். 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுவதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால் அது தொடர்பில் மட்டும் பேசுங்கள் – இல்லையென்றால். 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை இந்தியா வலியுறுத்த வேண்டியதில்லையென்று கூறிவிட்டு விடயத்துக்கு இத்துடன் முற்றுப்புள்ளியிடுங்கள்.
தொடர்ந்தும் மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கும் வகையில் செயல்படுவதை நிறுத்துங்கள். இல்லை – இன்றைய சூழலில் முன்நோக்கி பயணிப்பதற்கு 13ஆவது திருத்தச்சட்டம் உதவுமென்று நம்பினால் அதனை முன்வைத்து மட்டும் பேசுங்கள். இந்திய பிரதமருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் சமஷ்டி தொடர்பில் வகுப்பெடுக்கும் சிறுபிள்ளைத்தனத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். கடிதம் எழுதப்பட்ட பின்னர். அதனை முறையாகக் கையாளுங்கள். முன்னர் இடம்பெற்ற தவறை மீண்டும் செய்துவிடாதீர்கள். முதிர்ச்சியை காண்பியுங்கள்.