தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வாக்களிக்கச்செய்யும் உபாயம் கையாளப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி வடக்கில் இவர் தலைமையிலான குழுக்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், வலியுறுத்தியும் வருகின்றனர். அதனடிப்படையில் இன்றைய தினம் (21) கிழக்கு மாகாணத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படுவதின் முதல் கட்ட பணிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் மட்டு நகர் புறத்தில் ஆரம்பமானது.
இந்த நிலையில் கஜேந்திரன் எம்.பி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வழமை போன்று இந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வெற்றி வாய்ப்பைக் கொண்டிருக்க கூடிய பிரதான பெரும்பான்மையின வேட்பாளர்கள் மூன்று பேரும் தமிழ் மக்களுடைய வாக்குகளை குறிவைத்து போலி வாக்குறுதிகளை வழங்கி தமிழர்களை ஏமாற்றி , தமிழர்களுடைய வாக்குகளை பெறுகின்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வட கிழக்கில் இருக்கின்ற அவர்களுடைய முகவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினுடைய முகவர்கள், ஜேவிபி கட்சியின் முகவர்கள் மற்றும் சஜித் பிரேமதாசா அவர்களின் முகவர்கள் தங்களுடைய தனிப்பட்ட குடும்ப நலன்கள், தங்களுடைய இலாபங்களை மட்டும் கருத்தில் கொண்டு இந்த ஆட்சியாளர்களிடமிருந்து கிடைக்கின்ற அற்ப சொற்ப சலுகைகளை பெற்றுக் கொண்டு, தமிழ் மக்களுக்கு பசப்பு வார்த்தைகளை கூறி தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்று பேரினவாதிகளுக்கு கொடுப்பதற்கான வேலைகளை முன்னெடுத்திருக்கின்றனர்.
அதேவேளை இந்திய மேற்கு நாடுகளுடைய பின்னணியோடு கடந்த 15 வருடங்களாக ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்டு அதற்குள்ளான 13வது திருத்தச் சட்டத்தை தீர்வாக வலியுறுத்தி வருகின்ற தரப்புக்கள் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் என்கின்ற போர்வையிலே தமிழ் மக்களினுடைய தேசிய அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த போகின்றோம் என்கின்ற ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அவர்களை வேட்பாளராக நிறுத்தி எங்களுடைய மக்களை ஏமாற்றி இந்த தேர்தலில் வாக்களிப்பு செய்கின்ற உபாயத்தையும் சில தமிழ் தரப்பினர் கையாண்டு வருகின்றார்கள்.
கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கொழும்புக்கு வந்து கட்சிகளை சந்தித்தபோது நாங்கள் எட்டு பேர் சந்தித்திருந்தோம். அதில் நான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பிலும், விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி சார்பிலும், டெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தனும், தமிழரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா மற்றும் எதிர்கால தலைவர்களான யார் என தெரியாத சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோரும் வந்திருந்தனர். அத்தோடு சாணக்கியனும் வந்திருந்தார்.
இவர்கள் அனைவருமே 13 வது திருத்தச் சட்டத்தையே வலியுறுத்தி இருந்தார்கள். ஆகவே பொது வேட்பாளரை நிறுத்தி சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களுடைய அபிலாசைகளை கூற போகின்றோம் என்றவர்கள், நான்காவது வல்லரசு நாடான இந்தியாவின் அரச தலைவரை தேடிச் சென்று, நாங்கள் எங்களுடைய உதவியை கூற வேண்டிய நேரத்தில், அவர் எங்களை தேடி வந்த போது இந்த ஏழு பேரும் கூட்டாக 13ஆம் திருத்தச் சட்டத்தை தான் தீர்வாக வலியுறுத்தி இருந்தார்கள்.
இதனால் இவர்கள் சொல்லவரும் விடயம் என்னவென்றால் தமிழ் மக்கள் பொதுவேட்பாளர் என்னும் விடயத்தினூடாக, ஒற்றையாட்சிக்குள் 13-வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு இது ஒரு பௌத்த சிங்கள நாடு என்பதனை கூறுவதற்காகவும், அதனை தாம் ஏற்றுக்கொள்வதாக சர்வதேசத்திற்கு கூறுவதற்காகவுமே தங்களுடைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றார்கள்.
உண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் தான் சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம், உலக விசாரணையை நிராகரிக்கின்றோம். இந்த அரியனேந்திரன் உட்பட சுமந்திரன், ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், விக்னேஸ்வரன் சகலருமே உள்ளக விசாரணையை வலியுறுத்தியவர்கள், கோட்டபாய ராஜபக்சவை பாதுகாத்தவர்கள்.
இவர்களினால் தான் இன்று நாமல் ராஜபக்ச தமிழர்களுக்கு உரிமை கொடுக்க மாட்டேன், அதிகாரங்களை கொடுக்க மாட்டேன், வடகிழக்கை இணைக்க மாட்டேன் என்று சொல்லி கூறுவதற்கான துணிச்சல் வந்திருக்கின்றது என்றால் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நயவஞ்சகர்களும், இந்த விக்னேஸ்வரனும் சேர்ந்து கடந்த காலத்தில் இந்த இன படுகொலையாளிகளை பாதுகாத்து விட்டதன் விளைவாகத்தான் அவர்கள் துணிச்சலாக எழுந்து நின்று இன்று நாமல் ராஜபக்சவை ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றார்கள்.
இதனால் தான் நான் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு வடகிழக்கு மக்களை வலியுறுத்துகின்ற காரணம் என்று மேலும் தெரிவித்தார்.