உள்நாட்டு பொறிமுறையில் இருக்கின்ற அத்தனையும் பூட்டப்பட்ட கதவுகளாக இருக்கின்றன அதனூடாக நியாயமான நீதியான மனித உரிமையை பாதுகாக்கின்ற ஒரு தீர்வு கிடைக்க முடியாத நிலையில் இருக்கின்றதனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்து போராடுகின்றார்கள். போராடிக் கொண்டு இறந்தும் இருக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
நாளைய தினம் (30) திருகோணமலையில் நடைபெறவுள்ள வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இன்று (29) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாளை 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமாக காணப்படுகின்றது. அந்த வகையில் வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாம் இழந்த, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைப் பற்றி தங்களுடைய மன கொதிப்பை ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்ற ஒரு விதமாக இது அமைந்திருக்கின்றது.
அந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மாத்திரம் அல்லாமல் அந்த வலிகளை தாங்கிக் கொண்டு இருக்கின்ற உறவுகளின் சார்பாக அவர்கள் தங்களுடைய மன ஆதங்கத்தை போராட்டமாக அதாவது அகிம்சை ரீதியான போராட்டமாக முன்னெடுத்து இருக்கின்றார்கள்.
அந்த வகையில் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தங்களுக்கு 15 ஆண்டுகளாக நீதி வழங்கப்படவில்லை என்பதனை வெளிக்காட்டக்கூடிய விதத்தில் அந்த ஆர்ப்பாட்டத்தை அகிம்சை ரீதியாக செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.
கிழக்கில் நடைபெறுகின்ற அந்த போராட்டம் என்பது திருகோணமலை சிவன் கோயில் முன்பாக நடைபெற இருக்கின்றது என்பதனை எமது உறவுகள் நாங்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எங்களுக்கு போராடுவதற்கான வழி என்பது இந்த அஹிம்சை ரீதியான போராட்டமும், ஜனநாயக ரீதியான போராட்டமுமே இருக்கிறது. இதனால் 15 ஆண்டுகளாக தெருக்களில் நின்று நாங்கள் புலம்பி கொண்டிருக்கின்றோம். கண்ணீரும் கம்பலையுமாக எமது உறவுகள் தெருவில் நின்று கொண்டிருக்கின்றன. இதற்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
உள்நாட்டு பொறிமுறை ஊடாக இலங்கை தமிழ் மக்களுக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாக இருந்தால் என்ன?, சாதாரணமாக வாழ்கின்ற மக்களாக இருந்தால் என்ன அவர்களுக்கு நீதியான தீர்வு என்பது கிடைக்காமல் இருக்கின்றது.
எனவே சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியை கோருகின்ற ஒரு போராட்டமாக இது அமைந்திருக்கின்றது. உள்நாட்டு பொறிமுறையில் இருக்கின்ற அத்தனையும் பூட்டப்பட்ட கதவுகளாக இருக்கின்றன. அதனூடாக நியாயமான, நீதியான மனித உரிமையை பாதுகாக்கின்ற ஒரு தீர்வு கிடைக்க முடியாத நிலையில் இருக்கின்றதனால் இந்த மக்கள் தொடர்ந்து போராடுகின்றார்கள். போராடிக் கொண்டு இறந்தும் இருக்கின்றார்கள்.
உறவுகளை தேடி போராடுகின்றவர்கள் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தாய்நாட்டில் அந்த உள்நாட்டு மக்களை வதைப்பது, கொல்வது, காணாமல் ஆக்குவது என்பது ஒரு மனித பேரவலத்தின் உச்சமான நிலைப்பாடாக கருதப்படுகின்றது.
எனவே 30.08.2024 திகதி அன்று திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்பாக துறைமுக வீதியில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தினை நடத்துவதற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் முடிவெடுத்திருக்கின்றார்கள்.
மட்டக்களப்பில் அமலநாயகி அவர்களும், அம்பாறையில் செல்வராணி அவர்களும், திருகோணமலையில் செபஸ்டியன்தேவி அவர்களும் இந்த முடிவை எடுத்து இதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே அவர்கள் உறவுகளை இழந்த அவலத்தோடு மாத்திரம் அல்லாமல் மற்றவர்களது உறவுகளை இழந்த அவலத்தை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் பல்வேறுபட்ட தடங்கல்களுக்கு மத்தியில் இவற்றை செய்து கொண்டிருக்கின்றார்கள்.