எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள அரியநேந்திரன், தேர்தல் களத்திலிருந்து விலக வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றையதினம்(01) பல மணி நேரமாக வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய குழுக் கூட்டம் பல மணிநேரமாக இடம்பெற்றது. இதில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேந்திரனை ஆதரிப்பதில்லை என தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், எமது கட்சி உறுப்பினராகிய அரியநேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2024 இல் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு கொடுப்பதாக தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இதுவரை எமது கட்சி தீர்மானம் எதனையும் அறிவிக்காமையால் கட்சி உறுப்பினர்கள் பலவாறாக செயற்பட்டனர்.
தற்போது தீர்மானம் எடுக்கப்பட்டு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதனால், கட்சி உறுப்பினர்கள் அதற்கேற்ப செயறட்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
அதேசமயம் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், த.கலையரசன், எஸ்.குகதாசன், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கே.வி. தவராசா, கே.சிவஞானம், செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.