இலங்கையில் சட்டவிரோத ஆயுதங்கள் பற்றி தகவல் வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களின் மூலம் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுகள் நாடு முழுவதிலும் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உளவுத் தகவல் வழங்குவோரை ஊக்குவிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் 25ம் திகதி முதல் அடுத்த மாதம் 31ம் திகதி வரையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் சுற்றி வளைப்புக்கள் மூலம் சட்டவிரோத ஆயுதங்களை மீட்கும் போது அது பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் இந்த சன்மானத் தொகை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.
ரீ56 ரக துப்பாக்கி வைத்திருக்கும் சந்தேகநபர் பற்றிய தகவல்கள் வழங்கினால் அவருக்கு 250,000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கி ஒன்று பற்றிய தகவல்களை வழங்கினாலும் இவ்வாறு 150,000 ரூபா முதல் 250,000 ரூபா வரையில் சன்மானம் வழங்கப்படவுள்ளது.