மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைகள் உள்நுழையும் காட்டுப் பகுதியில் பனை விதைகள் நடும் வேலைத் திட்டம் நேற்று(04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யானை பாதுகாப்பு வேலி ஓரங்களில் நேற்றைய தினம் பன்சேனை கிராம அலுவலர் பிரிவில் பனை விதைகள் நாட்டப்பட்டன.
காந்தி நகர், உன்னிச்சை, ஆயித்தியமலை போன்ற பிரிவுகளிலும் பனம் விதைகளை நடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மண்முனை மேற்கு பிரதேச செயலகம் ஏற்பாட்டு செய்த இத்திட்டத்தில் வன பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், பிரதேச விவசாய அமைப்புகள் என்பன இணைந்து செயற்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி, வன பாதுகாப்பு திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் ஜெயக்குமார், உதவி பிரதேச செயலாளர் யோகராஜா, என பலர் கலந்து கொண்டனர்.
முதற்கட்டமாக 25 ஆயிரம் பனை விதைகள் நடப்படவுள்ளதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.