தமிழ்த் தேசிய அரசியல், முன்னேற்றங்கள் எதுவுமின்றி வழமைபோலவே ஊர்ந்து செல்கின்றது.
ஊர்ந்து செல்கின்றதென்று கூறுவதுதான் சரியான சொல்லாகும் – அந்தளவுக்கு நிலைமைகள் மோசமடைந்தே செல்கின்றன.
யுத்தம் நிறைவுற்று 14 வருடங்களாகிவிட்டன. இந்தக் காலத்தில் பயன்படுத்திய சொற்களும் பரப்பப்பட்ட நம்பிக்கைகளும் அலாதியானவை – ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளால் ஓர் அடிகூட முன்னோக்கி நகர முடியவில்லை.
சர்வதேச அழுத்தங்களை அதிகரியுங்கள் – தமிழர்மீது கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை ஒன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றதென்று – ஒப்பாரி வைத்த போதிலும் உலகத்தின் கடைக்கண் பார்வை தமிழர்மீது திரும்பவில்லை.
இதுவரையில் திரும்பாத அவர்களின் பார்வை இனியும் திரும்புமென்று வாதிடுவதில் அர்த்தமில்லை.
ஏன் இவ்வாறானதொரு நிலையென்று கேள்வி எழுப்பினால் ஒரு கட்சி இன்னொரு கட்சிமீது குற்றம் சாட்டுவதே தமிழர் பக்க வாதமாக இருக்கின்றது.
உண்மையில், மக்களின் நோக்கில் அனைவருமே குற்றவாளிகள்தான்.
ஏனெனில், விடயங்களை சாதகமாகவும் தந்திரோபாயமாகவும் கட்சிகள் கையாளவில்லை.
முக்கியமாக கடந்த 14 வருடங்களில் ஆகக் குறைந்தது தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்துமாக ஒன்றிணைந்து தேர்தல் அரசியலுக்கு அப்பாலான ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டியெழுப்ப முடியவில்லை.
உண்மையில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியாக எழுச்சியுறுமாக இருந்தால் இராஜதந்திர சமூகம் தமிழர் பக்கம் திரும்புவதை தவிர்க்க முடியாது. ஏனெனில், இலங்கையில் இரண்டு அரசியல் முகாம்கள் இருக்கின்றன.
ஒன்று சிங்கள அரசியல் முகாம் அடுத்தது, தமிழ் அரசியல் முகாம்.
இந்த அடிப்படையில்தான், மேற்குலகமும் இந்தியாவும் இலங்கையை கையாண்டு வருகின்றன.
ஆனால், இந்த இரண்டு முகாம்களில் ஒன்றான தமிழர்கள் மிகவும் பலவீனமானதோர் அரசியலை முன்னெடுத்து வருவதனால் மேற்குலகமும் இந்தியாவும் தமிழர் முகாமை ஒரு தரப்பாக கையாளவில்லை – கையாள்வதற்கு விரும்பவுமில்லை.
1980களுக்கு பின்னரான சூழலில், இந்தியா தமிழர்களை ஒரு தனி முகாமாகவே கையாண்டது.
அதனடிப்படைலேயே இலங்கை தொடர்பான கொள்கை நிலைப்பாட்டை முன்னெடுத்தது.
ஆனால், இன்றோ தமிழர்களை வெறுமனே சிறுபான்மை என்னும் நிலையிலேயே கையாள்கின்றனர்.
இந்தியாவின் நிலைப்பாடும் மேற்குலகின் நிலைப்பாடும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றது.
இதற்கு அவர்களை குற்றஞ்சாட்டுவதில் பயனில்லை. ஏனெனில், தங்களை ஒரு தரப்பாக நிரூபிக்க வேண்டியது தமிழர்களின் பணியாகும்.
தமிழர்கள் தங்களின் பணியை சரியாக முன்னெடுக்காதபோது மற்றவர்கள் எதற்காக தமிழர்களை நோக்கி திரும்ப வேண்டும்? ஏனெனில், இது நலன்சார் அரசியல் உலகாகும்.
தமிழர்கள் தங்களை ஓர் அரசியல் பலமுள்ள மையமாக திரட்டிக்கொள்ளாத வரையில், தமிழர்களுக்கென்று தனியான அரசியல் இருக்கப் போவதில்லை.
அவ்வப்போது மனித உரிமைகள், ஜனநாயகம், 13ஆவது திருத்தச்சட்டம் – இவ்வாறான சொற்களோடு மட்டுமே தமிழரின் அரசியல் சுருங்கிப் போகப்போகின்றது.
இதற்கப்பால் எவருமே தமிழர் மீது, பிரத்தியேக கரிசனைகொண்டு செயலாற்றப் போவதில்லை.
இந்த நிலைமையை மாற்றியமைக்கவேண்டுமாயின், தமிழர் தரப்புகள் ஓர் ஐக்கிய முன்னணியாக மாறவேண்டும்.
இதற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அனைவரையும் தமிழர் சமூகம் தேர்தல் மூலம் தோற்கடிக்க வேண்டும்.
ஐக்கிய முன்னணி உபாயத்தை சீர்குலைத்து தாங்கள் மட்டும் புனிதர்களென்று கூற எவரெல்லாம் முயற்சிக்கின்றார்களோ அவர்களே தமிழ் மக்களின் பரம எதிரிகளாவர்.