இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
ரசிகர்களால் ஹிட் மேன் என அழைக்கப்படும் ரோஹித் சர்மா 2007 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தை எதிர்த்து விளையாடிய போட்டியில் முதல் முறையாக அறிமுகமானார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
அயர்லாந்துக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய ரோஹித் சர்மா இதுவரை 441 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 17,115 ஓட்டங்களை குவித்துள்ளார்.
அதில் 43 சதங்கள் அடங்கும். தற்போது இந்திய அணியின் கேப்டனாக செயற்பட்டு வரும் அவர் ஐசிசி கோப்பையை வெல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சர்வதேசப் போட்டியில் அறிமுக ஆட்டம் குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது:
கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு விளையாடுவதற்கு நான் தேர்வானபோது முதல் முறையாக ராகுல் டிராவிட்டிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. குறைந்த நேரம் மட்டுமே அவரிடம் நான் பேசினேன்.
எனக்கு பதற்றமாக இருந்தது. நான் என் வயது உடையவர்களிடம் கூட அப்போது அதிக நேரம் பேசியதில்லை.
அதனால் நான் அமைதியாக என்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்தினேன். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடுகிறேன் என ராகுல் டிராவிட் கூறியபோது நான் நிலவில் இருப்பதுபோல் உணர்ந்தேன்.
எனது கனவு நிறைவேறியதாக உணர்ந்தேன் என்றார்.இதனையடுத்து ரோஹித் சர்மா குறித்து ராகுல் டிராவிட் பேசியதாவது:
காலம் வேகமாக ஓடுகிறது. அயர்லாந்துக்கு தொடருக்கு முன்னதாகவே எனக்கு ரோஹித் குறித்து நினைவிருக்கிறது.
சென்னையில் விளையாடியபோது அவரது ஆட்டத்தை பார்த்திருக்கிறேன். ரோஹித் சர்மா இந்திய அணிக்கு சிறப்பான வீரராக இருக்கப் போகிறார் என எங்களுக்குத் தெரிந்தது.
அவர் மிக மிக திறமை வாய்ந்தவர். கடந்த 14 ஆண்டுகளில் அவர் ஒரு அணியின் தலைவராக உயர்ந்துள்ளார்.
இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் அவர் அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது என கூறியுள்ளார்.