யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை ( 4) இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்ய வேண்டும் என கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் , அயலவர்களும் இணைந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக இரவு கூடி இருந்தனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவிக்கையில்,
ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று இரவு வீட்டுக்கு வந்து , இருவர் வெளியில் காவல் நிற்க ஏனைய நால்வரும் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த 05 வயதான என் மகனை தாக்கினார்கள்.
பின்னர் எனது சகோதரி குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த வேளை அவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அதனை தடுக்க சென்ற சகோதரனையும் தாக்கினார்கள். அங்கிருந்த எனது மற்றைய மகனையும் தாக்கினார்கள்.
நாங்கள் அவலக்குரல் எழுப்ப , வீட்டில் நின்ற எனது மோட்டார் சைக்கிளை தள்ளி விழுத்தி , கதிரைகளை அடித்து உடைத்து , வேலித் தகரங்களை பிடுங்கி அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வன்முறை கும்பலின் தாக்குலில் காயமடைந்த எனது சகோதரியை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம்.
இரவில் வீட்டில் இருக்க பயமாக இருக்கிறது. மீண்டும் அவர்கள் வந்து தாக்குதல் நடத்துவார்களோ என்ற அச்சத்தில், தாக்குதலாளிகளை கைது செய்யுமாறுகோரி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக கூடியுள்ளோம் என தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.