புலத்திசி கடுகதி தொடருந்து சேவை பயன்படுத்தும் மக்களுக்காக மட்டக்களப்பு அக்கரைப்பற்றுக்கான புதிய தொடருந்து இணைப்பு பேருந்து சேவை போக்குவரத்து அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் பணிப்பின் பேரில் நேற்றையதினம் (25.06.2023) மட்டக்களப்பு அக்கரைப்பற்றுக்கான தொடருந்து இணைப்பு பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அரசாங்கத்தினால், கிழக்கு மாகாண பொது மக்களின் நலன் கருதி புலத்திசி கடுகதி தொடருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எனினும் அக்கரைப்பற்று வரையிலான பொதுமக்களுக்கு இலகுவான தொடருந்து இணைப்பு சேவை இல்லாமல் இருந்ததை பொதுமக்கள் ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து போக்குவரத்து அமைச்சரிடம் இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு, இலங்கை போக்குவரத்து சபையினால் இந்த விசேட பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் பின்னிரவு வேளையில் மட்டக்களப்புக்கு வரும் தூர இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இதன் மூலம் நன்மை அடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தொடருந்து இணைப்பு பேருந்து ஆரம்ப நிகழ்விற்கு ராஜாங்க அமைச்சரின் பிரதிநிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் கலந்துகொண்டு கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.