பல்துறை சார் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் உத்தியோபூர்வமாக கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நேற்று (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் டி.சதானந்தத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பேராசிரியரும் மருத்துவருமான அருளானந்தம் தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு இலவச மருத்துவ சேவையினை வழங்கும் நோக்குடன் இந்நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் அமைந்துள்ள மட்டக்களப்பு பிள்ளையாரடிப் பகுதியை அண்மித்துள்ள 7 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி இலவச மருத்துவ சிகிச்சை முகாமும் நேற்று ஒழுங்குபடுத்தப்பட்டது.
பல்துறை சார் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையத்தின் இணைப்பாளர் வைத்தியர் திலினி, வைத்திய நிபுணர் பேராசிரியர் கருணாகரன், வைத்திய நிபுணர் பேராசிரியர் உமாகாந்தன்,வைத்தியர் ஏஞ்சலா அருள்பிரகாசம், மையத்தின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் தட்சணாமூர்த்தி உட்பட மருத்துவ பீட வைத்தியர்கள் , மருத்துவ பீட பயிற்சி மாணவர்கள், தாதிய பயிற்சி மாணவர்கள் என பலரும் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.