ஆந்திராவில் அழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட மதுபோத்தல்களை ‘குடி’மகன்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றதை கண்டு பொலிஸார் அதிர்ந்து போயினர்.
சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட மதுபோத்தல்களை பறிமுதல் செய்யும் பொலிஸார் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் அதை உரிய அனுமதியுடன் அழிப்பது வழக்கம். அப்படி ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் போது மது பிரியர்கள் பொலிஸாரையே தெறிக்க வைத்து ஓடவிட்டிருக்கின்றனர்.
இதுபற்றி மேலும் தெரியவருகையில், ஆந்திர மாநிலம் குண்டூரில் பல்வேறு சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மதுபோத்தல்களை பொலிஸார் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்காக கைப்பற்றப்பட்ட மதுபோத்தல்களை எட்டுகுருசாலையில் உள்ள ஒரு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான ரூ.50 இலட்சம் மதிப்புள்ள மதுபானங்களை பல்வேறு இரகங்களில் அவற்றை தரையில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர்.
அதன் மீது புல்டோசரை ஏற்றி அழிப்பது என்பது அவர்களின் நடவடிக்கையாக இருந்தது. எல்லாவற்றையும் தயார் செய்து வைத்துக்கொண்டு, ‘ஆதாரம் வேண்டுமே’ என்பதற்காக, போத்தல்கள் அடுக்கி வைத்திருப்பதை புகைப்படம், காணொளி எடுத்துக் கொண்டிருந்தனர்.
இப்படி வேலை நடந்து கொண்டிருந்தபோது, திடீரென எங்கிருந்தோ கூட்டமாக வந்த ‘குடி’மகன்கள், உற்சாகத்தில் பொலிஸார் கண்முன்னே போட்டி போட்டுக்கொண்டு அவற்றை அள்ளி எடுக்கத் தொடங்கினர். இரண்டு கைகளிலும் முடிந்த அளவுக்கு அள்ளி எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினர்.
ஒரு நொடியில் நிகழ்ந்த இந்த திடீர் அபகரிப்பைக் கண்டு அதிர்ந்த பொலிஸார் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தனர். எடுக்கக்கூடாது என்று சொல்லிப் பார்த்தும், யாரும் கேட்பதாக இல்லை.
குறைந்த எண்ணிக்கையில் இருந்த பொலிஸாரால், ‘குடி’மகன்களை எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் போத்தல்களை அள்ளிக் கொண்டு அங்கிருந்து ஓடுவதிலேயே குறியாக இருந்தனர். ஒரு சில நிமிடங்களில் மொத்த இடமும் காலியாகி விட்டது.
‘குடி’மகன்களின் இந்த செயலால் திகைத்துபோன பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் இத்தனை பேர் எங்கிருந்து வந்தனர், அவர்களுக்கு மதுபோத்தல்களை அழிப்பது எப்படி தெரியும் என்ற ரீதியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.