தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனுபவித்த துன்பங்களுக்கு தீர்வாக இம்முறை தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் எனவும், அது தமிழர்களின் தலையாய கடமையெனவும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் தெரிவித்தார்.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் வகையில் எடுத்த தீர்மானத்தினை அறிவிக்கும் வகையிலான ஊடக சந்திப்பு மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள ஒன்றியத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள், செயலாளர் சிவஸ்ரீ சி.குகநாதன் குருக்கள், உறுப்பினர் சிவஸ்ரீ செ.கு.உதயகுமார் குருக்கள் ஆகியோர் கலந்து கருத்து தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தலைவர்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற எமது தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து இன்று எமது அலுவலகத்தில் நாங்கள் இந்த ஊடக சந்திப்பை நடத்துவதற்கு முன் வந்துள்ளோம்.
நமது இந்த இலங்கை திரு நாட்டில் எமது மக்கள் இதுவரை காலமும் பெரும்பான்மை இன சிங்கள ஜனாதிபதிகளுக்கு பல்வேறு பட்ட ஆதரவை வழங்கியிருந்தோம் அதன் மூலமாக எங்களது மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மாத்திரமே அன்றி வேறு எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.
ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களினால் எமது இனம் மிகவும் மோசமாக வஞ்சிக்கப்பட்டது. தமிழர்கள் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள். எமது இனம் கொன்றொழிக்கப்பட்டது. இவை அனைத்தையும் இதுவரை காலமும் நாங்கள் அனுபவித்து வந்திருக்கின்றோம்.
தமிழர் பொதுச் சபையிலே எமது கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் அங்கத்தவர்கள் ஆக இருக்கின்றோம். அதன் மூலம் இந்த பொது கட்டமைப்பினால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அரியநேந்திரன் அவர்களை ஆதரிக்க வேண்டும். ஏனென்றால் அது தமிழர்களுடைய தலையாய கடமை ஆகும்.
எங்களது இனம், தேசிய சுய நிர்ணயம் ஆகியவற்றை நாங்கள் பெற வேண்டுமாக இருந்தால் உங்களுக்காக அந்த வலுவான சக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாக இருந்தால், தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதனை சர்வதேசத்திற்கும், இலங்கையில் மாறி மாறி வருகின்ற பௌத்த அரசியல்வாதிகளுக்கும் எடுத்துக்காட்டுவதற்கு இந்த தேர்தல் ஒரு முக்கியமான களமாக அமைந்திருக்கின்றது.
ஏனென்றால் இந்த தேர்தலிலே தமிழர்கள் என்கின்றவர்கள் இதுவரை காலமும் தமிழ் தேசியம் என்கின்ற போர்வையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
இம்முறை முதல் முறையாக வடகிழக்கில் இருக்கின்ற தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியத்தின் பால் உறுதிபூண்டு அனைவரும் ஒற்றுமையாக எமது ஜனாதிபதி தேர்தலிலே மற்றவர்களுக்கு நாங்கள் எடுத்துக்காட்டாக இந்த பொது வேட்பாளர் அவர்களை நாங்கள் ஆதரிக்க வேண்டும்.
அது மாத்திரம் இல்லாமல் இரு ஜனாதிபதி தேர்தலிலே பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக போட்டியிடவில்லை எமது மக்களுடைய ஒற்றுமை, எங்களுடைய உரிமைக்காக நாங்கள் குரல் கொடுப்பதற்கு எல்லோரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக முதல் முறையாக ஒரு படிக்கல்லாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம்.
ஆகவே ஒவ்வொரு தமிழ் மக்களும் உணர்ந்து எதிர் வருகின்ற 21 ஆம் திகதி காலையில் இறை வழிபாட்டுடன் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் சென்று எமது சங்கு சின்னத்திற்கும் எமது வேட்பாளர் அரிய நேந்திரன் அவர்களுக்கு மாத்திரம் தங்களது வாக்கினை செலுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் அனைவரும் எங்களது உரிமைகளுக்காகவும், நாங்கள் பட்ட துன்பங்களில் இருந்து வெளியேறி, நாங்களும் சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என்று சர்வதேசத்திற்கும் , ஏகையிலே வருகின்ற அரசியல் தலைமைகளுக்கு உணர்த்துவதற்கு எல்லோரும் அணி திரண்டு, எமது சங்கு சின்னத்தை வலுப்பட செய்வோம்.
அதன் மூலம் எமது உரிமைகளையும், எமது கோரிக்கைகளையும் நாங்கள் வென்றெடுப்பதற்கு அனைவரும் ஒன்று சேருமாறு உங்களை அன்போடு வேண்டுகின்றோம்.