ஜனாதிபதி ரணில் ராஜபக்சக்களுக்கு பயந்து தன்னுடைய காலத்தை செலவழித்தவர். அவர் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார். அவரை நம்பமாட்டேன். 13 தவிர வேறு எதுவும் தரமாட்டார்கள் எனவே ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எமது அகில இலங்கை மகாசபை கட்சி தீர்மானித்துள்ளது. எனவே தமிழ் மக்கள் அவரை ஆதரித்து வாக்களிக்கவும் என கட்சியின் தலைவர் கலாநிதி. காசிலிங்கம் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெய் ஓப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என தெளிவாகத்தான் இருந்தோம். ரணில் பல வாக்குறுதிகளை எங்களுக்கு கொடுத்திருந்தார். முதலில் அவருடன் நேரடி பேச்சுவார்தை நடாத்தினோம். அப்போது அவர் நீங்கள் கூறுங்கள் எல்லாவற்றையும் செய்கின்றேன் என்றார். அப்போது நாங்கள் மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் பல விடையங்களை செய்யவேண்டியுள்ளது மாகாணசபைக்கு கீழ் இருந்த பல பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் தேசிய பாடசாலைகளாகவும், வைத்தியசாலைகளையும் தேசிய வைத்தியசாலைகளாக மாற்றியுள்ளனர் இதனை உடன் மாகாணத்தின் கீழ் மாற்ற வேண்டும் இதற்கு சட்டம் இயற்றவேண்டியதில்லை இதற்கு ஒரு உத்தரவு வழங்கினால் சரி என்றோம்.
அதேமாதிரி கச்சேரிகளை ஒரு அமைச்சரவை தீர்மானம் எடுத்து மாற்றமுடியும் என்றோம் அதற்கும் உடன்படுவதாக தெரிவித்தார். நாங்கள் விசேட அதிகாரத்தை கொண்டு இவற்றை எல்லாம் உருவாக்க முடியும் என்றோம் அதேவேளை இதனை செயற்படுத்த 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைப்பதாக தீர்மானித்தோம் அதற்கும் சரி என்றார் ஜனாதிபதி ரணில்.
அதனை இந்தியாவுக்கும் அறிவித்தோம். அதன் பின்னர் அவர் இந்தியாவுக்கு சென்றபோது அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அங்கும் சொன்னர் இவற்றை எல்லாம் செய்வேன் என்று. ஆனால் திரும்பி இங்கு வந்த பின்னர் இதனை செய்யவில்லை ஏன் என்றால் ராஜபக்ஸ கட்சி இவற்றை செய்வதற்கு இடம் கொடுக்கவில்லை என தெரியவந்தது.
ஆதனால் பசில் ராஜபக்சவை சந்திப்பதற்கு 5 தடவை முயற்சி செய்தேன். அவர் என்னை சந்திப்பதை தவிர்த்து கொண்டார். அப்படியான ரணில் ராஜபக்சக்களுக்கு பயந்துகொண்டவர் என்பதால் அவரிடமிருந்து எதை எதிர்பார்க்கமுடியாது. எனவே இவரால் எதுவுமே செய்யமுடியாது என முடிவு எடுத்துவிட்டோம்.
இந்த வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு முக்கயமானவர்கள் ராஜபக்சக்களும், ஜே.வி.பியும்.
மகிந்த ஜனாதிபதியானவுடன் வடக்கு கிழக்கை பிரிக்கவேண்டும் என ஜே.வி.பி வழக்கு தொடர்ந்து பிரித்தவர்கள். இப்போது 13 திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்கின்றனர். இவர்கள் இந்திய இலங்கை கையொப்பம் இட்டபோது அதற்கு எதிராக யுத்தம் செய்தனர். எனவே அவர்கள் எந்த காலகட்டத்திலும் தமிழர்களுக்கு அதிகாரத்தை கொடுக்கப் போவதில்லை.
அதேமாதிரி 2019ம் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோர் அதிகார பகிர்வு தருவதாக கூறினர். இன்று 35 இலட்சமாக இருக்க வேண்டிய தமிழ் மக்கள் சனத்தொகை 17 இலட்சமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இவர்களினது அதிகார பகிர்வு கிடைக்கும் என இருந்தபோதும் தற்போது அதுவும் இல்லை எனவே ராஜபக்சக்களையும் நம்பமுடியாது
தற்போது ஜீ.எல். பீரிஸ் சுஜித்துடன் இருக்கின்றார். அதனால் எங்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு ஏன் என்றால் அவரின் தந்தை பிறேமதாச ஜனாதிபதியாக வந்ததும் எல்லாவிடையத்திலும் உதவி செய்ய தயாராக இருந்தார். அப்போது ஒரு வல்லரசு நாடு இதை செய்யவேண்டாம் நீங்கள் இந்த 13 க்கு எதிராக யுத்தம் செய்யும் தமிழருக்கு உதவி செய்யவும் என்றனர். அவரும் முட்டாள்தனமாக உதவி செய்ய வெளிக்கிட்டு கடைசியாக அவரின் உயிரையே மாய்த்துக் கொண்டார். எனவே அவரின் மகன் செய்வார் என்ற நம்பிக்கை உண்டு.
அதேவேளை கோட்டபாய ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியபோது புலம்பெயர் தமிழர்கள் தொலைபேசி ஊடாக என்னை தொடர்பு கொண்டு தமிழ் வேட்பாளராக நிற்குமாறும் தேவையான பணம் தருவதாக தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டு அதற்கு பதில் சொல்லுமாறு கேட்டேன், நான் ஒரு தமிழன் ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை விளங்கப்படுத்துமாறும் அதற்கு 24 மணித்தியாலம் அவகாசம் கேட்டு அதனை நான் ஏற்று கொண்டால் நான் வேட்பாளராக நிற்கின்றேன் என்றேன். ஆனால் அவர்கள் அதன் பின்னர் தொடர்பு கொள்ளவில்லை.
அதன் பின்னால் சிவாஜிலிங்கத்தை வேட்பாளராக போட்டியிடவைத்தனர் அதே ஆட்கள்தான் இன்று பொதுவேட்பாளரை போட்டுள்ளனர். சிவாஜிலிங்கமும் 13 எதிர்த்தவர் இவரும் 13 எதிர்த்தவர் எனவே 13 தவிர எங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதுவும் கிடைக்க போவதில்லை. அதுவும் இல்லாமல் போகும் நிலமை வந்துவிட்டது எனவே 13 எதிர்க்கும் பொது வேட்பாளரை தமிழ் மக்கள் தூக்கி எறியவேண்டும்.
அதேவேளை வடக்கு கிழக்கில் 13 திருத்தச்சட்டம் திருத்தப்படாததற்கு முக்கிய காரணம் அங்கு உரிய சட்டங்கள் உருவாக்கப்படாமை இதில் சட்டங்களை உருவாக்கினால் மட்டும் தான் அதிகாரங்களை பயன்படுத்த முடியும் ஆனால் எங்களால் சட்டங்கள் உருவாக்க முடியவில்லை
கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது அங்கு இருந்த ஆளுநர் சட்டங்கள் உருவாக்க இடம்தரவில்லை ஒன்றும் செய்ய விடவில்லை அவர் அதிகார பகிர்வுக்கு எதிரானவர் இருந்தபோதும் 9 சட்டங்களை உருவாக்கியபோது அதற்கு பணம் கொடுக்கமுடியாது என்று அதனை நிறுத்திவிட்டார். எனவே 10 சட்டங்கள் கூட கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவில்லை
வடக்கிலக்கில் என்ன நடந்தது அப்போதைய முதலமைச்சரான சி.வி.விக்கினேஸ்வரன் என்னை ஆலோசகராக வருமாறு கேட்டார் நான் தயாராக இருந்தேன் இருந்தபோதும் அவருடைய கட்சியை வழிநடத்துபவர் கட்சியில் இல்லாத அருட்தந்தை அவுஸ்ரேலியாவில் சமஸ்டி பொலிசில் இருந்த உத்தியோகத்தர் ஒருவரை அங்கிருந்து வரவழைத்து அவர் சமாதான முதுமானிபட்டம் படிப்பதற்காக முதலமைச்சர் வீட்டிலே தங்கவைத்து அவரின் ஆலோசகராக இருந்துகொண்டு முதலமைச்சர் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டார்.
ஏன் என்றால் 13 திருத்தச்சட்டத்தில் எதுவுமே கிடையாது என அருட்தந்தை உலகத்துக்கு காட்டவேண்டும் என்பதற்கா எனவே வடக்கு கிழக்கில் சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. ஆனால் மேற்கு மாகாணத்திலே 70 சட்டங்களும் வடமேற்கு மாகாணத்தில் 71 சட்டங்களை உருவாக்கியுள்ளனர் எனவே அவர்களால் இதனை உருவாக்கமுடியும் என்றால் ஏன் எங்களால் உருவாக்கமுடியாது.
எனவே புலம் பெயர்ந்தோர் வெளிநாட்டில் இருந்து கொண்டு அரசியல் செய்யவேண்டாம் முதலில் நீங்கள் அங்கிருந்து கொண்டு இரட்டை குடியுரிமையாக மாறவேண்டும். அதன் மூலம் இலங்கையில் குடியுரிமையை பெறுங்கள் இங்கே குடியுரிமை பெற்றால் வாக்குஉரிமை வரும்.
இரண்டாவது இங்குள்ள காணிகளை விற்கவேண்டாம். அதில் வீடுகளை கட்டி உரிமைகளை பேணுங்கள். அதேவேளை பணம் நிறைய இருந்தால் இங்கு வர்த்தகம் செய்யுங்கள். அதனைவிடுத்து அரசியலில் ஈடுபட்டு இங்கு பலர் அரசியலை கொண்டு நடாத்த முயற்சிப்பதனால் தான் இன்று தமிழர்கள் இந்த நிலைக்கு சென்றுள்ளனர். எனவே நீங்கள் காணிகளை விற்கவேண்டாம் நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கும் இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொடுங்கள் அப்படிவந்தால் மாத்திரமே தமிழ் மக்கள் பலமாக இருக்க முடியும் எனவே தமிழ் மக்கள் சஜித்தை ஆதரரித்து வாக்களிக்கவும் என்றார்.