தமிழின படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி நிற்கின்ற தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையிணை வரவேற்பதோடு,அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அதுபோல் நாமும் இணைந்தால் பலமே என்பதற்கு அமைய தமிழ் தேசமாக தேசிய இனத்தின் தொடர்ச்சியாக சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களித்து எமது பலத்தை நிரூபிப்போம் என வடகிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் வடகிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசமாக, தேசிய இனத்தின் தொடர்ச்சியாக தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு எமது உறவுகளை கோறுகின்றோம்.
தமிழ் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களாக விடுதலைக்காக பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகிறது தமிழ் மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மை மிக்க ஒரு இனம் இருப்பதையும், அவர்கள் ஒரு தனித்துவ தேசமாக வாழ்ந்து வருவதையும், அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள் உள்ளது என்பதையும், சிங்கள பேரினவாத அரசால் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.
சிங்கள அரசியல் தலைமைகளிடம் இருந்து நீதி கிடைக்கப் போவதில்லை என்பதையும் நாம் தெளிவாக புரிந்து எமது மக்களின் அரசியல் அபிலாசைகளான தமிழ் தேசியம், சுய நிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைந்த மரபு வழித்தாயகம் என்பதை நிலைநிறுத்தி எமது உரிமையை நாமே போராடி பெற வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளோம் அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சிங்கள பேரினவாத அரசிடம் இல்லை என்ற காரணத்தினால் நாம் சர்வதேசத்திடம் நமக்கான நீதியை கோரி தொடர்ந்து போராடி வருகின்றோம்.
வேலு தமிழ் தேசிய கட்சிகளும், தமிழர் தாயகத்தை சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்கள், கருத்து உருவாக்கிகள், புத்திஜீவிகள், குடிசார் அமைப்புகள், கிராமமட்ட அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு தமிழ் தேசிய பொது கட்டமைப்பாகும்.
தமிழ் தேசிய பொது கட்டமைப்பால் தென் தாயகத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அவர்களை சங்கு சின்னத்தில் 21ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள்.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகள் இராணுவ மயமாக்கல், பௌத்த சிங்களமயமாக்கல் என்ற திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினூடாக சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
சிங்கள பேரினவாத அரசு ஈழத் தமிழர்களை ஸ்ரீலங்காவின் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு எம்மை அரசியல் அடிப்படை உரிமைகள் அற்ற அடிமைகளாகவே வைத்திருக்க முனைவதோடு ஈழத் தமிழர்கள் இலங்கை தீவின் தேசிய இனம் என்பதை நீக்கம் செய்யவும் முனைகிறது.
ஆகவே தமிழர்களாகிய நாங்கள் ஒரே தேசமாக தமிழ் தேசியத்தின் தொடர்ச்சியாக ஓரணியில் நின்று எமது தார்மீக பலத்தை நிரூபிப்பதற்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிப்பதன் ஊடாக எங்கள் ஒருமித்த பலத்தை நிரூபிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழ் தேசிய பொது கட்டமைப்பால் தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தி முன்வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையானது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை வலியுறுத்தி நிற்பதாகவே உள்ளதையும், இதனை பொது வாக்கெடுப்பினை நோக்கிய ஆரம்ப செயல்முனைப்பிற்கான தொடக்கப் புள்ளியாகவும் எண்ணுகின்றோம்.
தமிழர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பளிக்க கூடிய வகையில் பன்னாட்டு பொறிமுறையினை வலியுறுத்தியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட நிலை மாறு கால நீதியினை வலியுறுத்தியும், தமிழின படுகொலைக்கு பொறுப்பு கூற வைக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிடம் பாரப்படுத்துவதன் ஊடாக தமிழின படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி நிற்கின்ற தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையிணை வரவேற்பதோடு, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அதுபோல் நாமும் இணைந்தால் பலமே என்பதற்கு அமைய தமிழ் தேசமாக தேசிய இனத்தின் தொடர்ச்சியாக சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களித்து எமது பலத்தை நிரூபிப்போம்.
அத்துடன் சர்வதேச சமூகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க விரைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எட்டு மாவட்டத்தின் தலைவிகள்.