முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அரசியல் மேடைகளில் தான் பெரிய உத்தமன் போல் ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் அவ்வாறு தொடர்ந்து செயற்படுவாராக இருந்தால் அவருக்கு எதிரான கருத்துக்களையும் நான் வெளியிட வேண்டி வரும் என முன்னாள் காகித ஆலை தவிசாளர் மங்கள செனரத் தெரிவித்துள்ளார்.
கறுவாக்கேணி வாழைச்சேனையில் அமைந்துள்ள சுயேற்சை ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக தொடர்ந்து கூறுகையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி தம்மை கேட்டபோதிலும் அந்தப் பதவியை ஏற்காத காரணம் இந்த ஜனாதிபதியின் அரசாங்கம் நிலைத்து நிற்காது என்கின்றபடியால் ஆகும்.அத்துடன் இந்த மத்திய வங்கி ஆளுநர் பதவியும் நிலைத்து நிற்காது, நிறைய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு குறித்த பதவியை ஏற்பது என்று கருதி எனது கட்சியின் தலைமை எடுத்த முடிவை அடுத்து அந்தப் பதவியை உதறித் தள்ளிவிட்டேன் என சமூக ஊடகங்களில் ஹிஸ்புல்லா கருத்து தெரிவித்துள்ளார்.இது அவரது அப்பட்டமான பொய்யாகும்.
ஜனாதிபதியை அவர் இரு முறைதான் சந்தித்துள்ளார்.ஒரு தடவை சந்தித்த போது நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு 50 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு கொண்டு வரப்போவதாகவும் அதனை கையாள்வதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை வழங்குமாறு அவரேதான் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் அவ்வாறு பணம் கொண்டு வரும்போது மத்திய வங்கியின் நிதி கட்டமைப்பை அவை சார்ந்த ஏனைய விடயங்களையும் மாற்றம் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறினார்.உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட குறிப்பாக ஜ.எம்.எப் (IMF) நிதி அமைப்பு கூட எமது ஜனாதிபதியை நம்பியே கடன் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது.
இவரது முட்டாள் தனமான கருத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.2 முறை சந்தித்தபோது தமது புனானை பல்கலைக்கழகம் சார்ந்த விடயங்களையே பேசினார்.அவ்வாறான சந்திப்புக்களில் ஜனாதிபதி கேட்டுக் கொண்டது இந்த பல்கலைக்கழகத்தை தங்களிடம் கையளித்தால் நீங்கள் எமது அரசாங்கத்திற்கு வழங்கும் ஒத்துழைப்பு என்ன என்பதாகும். இதைத் தவீர மத்திய வங்கி தொடர்பாக எதுவும் ஜனாதிபதி பேசவில்லை.
இச்சந்திப்பின் போது தற்போது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பல இடங்களில் பொய்யான கருத்துக்களை அரசியல் இலாபத்திற்காக பேசி வருகிறார்.இவ்வாறான கருத்துக்களை தொடர்ந்து ஜனாதிபதிக்கு எதிராக பேசி வருவாராக இருந்தால் அதற்கு பதில் வழங்க தயாராக இருக்கிறேன். இல்லையென்றால் ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் கிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோர்கள் முடிந்தால் இருவரும் நேரடியாக ஊடக சந்திப்புக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.